கிளிநொச்சி​யில் தனியார் காணியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு – பொலிசாரால் விசாரணை முன்னெடுப்பு!

Thursday, December 16th, 2021

கிளிநொச்சி​ – கோரக்கன்​கட்டு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

கோரக்கன்கட்டு பூங்காவன சந்தி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழி தோண்டிய போது துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற அனுமதிக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இதேவேளை குறித்த காணியிலிருந்து, T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் 750 ரவைகள் என்ற அடிப்படையில், 84 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 46,000 வெற்று ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றை தவிர, M-60 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 800 ரவைகளும், MPMG ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 400 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: