கிளிநொச்சியில் ஆசிரியைகளை கடத்த முயற்சித்த காடையர்கள் மடக்கிப் பிடிப்பு!

Friday, January 25th, 2019

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் ஏ-32 வீதியால் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரைக் கடத்த முற்பட்ட காடையர்களை இராணுவத்தினரும் மக்களும் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை 6.50 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து ஜெயபுரம் பாடசாலைக்கு ஏ-32 வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியைகள் இருவரை பூநகரி ஜெயபுரம் மண்டைக்கல்லாறு பாலத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து வழிமறித்த நால்வர்கொண்ட காடையர் குழுவினர் அவர்களை அச்சுறுத்தி காட்டுப்பகுதிக்குள் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை ஆசிரியைகள் இருவரும் செய்வதறியாது அலறியுள்ளனர்.

அவர்கள் காட்டுப் பகுதியில் கத்தும் சத்தம் கேட்டு வீதியால் சென்ற மக்களும் காட்டுப்பகுதிக்குள் முகாமை அமைத்திருந்த இராணுவத்தினரும் அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர். அதனை அவதானித்த காடையர்கள் ஆசிரியர்களைக் கடத்தும் முயற்சியைக் கைவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடமுற்பட்ட வேளை இராணுவத்தினரும் மக்களும் இணைந்து காடையர்கள் இருவரை பிடித்து ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  இருவர் தப்பிச் சென்று விட்டனர் எனவும் கூறப்படுகின்றது.

பிடிபட்ட இருவரும் விசுவமடு மற்றும் முள்ளியவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: