கிளாலியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை பயனாளியிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Tuesday, December 29th, 2020

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் பொதுமக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய வீடொன்றை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் பயனாளியிடம் கையளித்துள்ளார்.

குறித்த வைபவத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன், திட்டமிடல் பணிப்பாளர் மாலதி, கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு அதிகாரசபை முகாமையாளர் சுபாஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மங்கல விளக்கேற்றி உத்தியோகபூர்வமாக வீட்டைத் திறந்துவைத்த ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன், பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் ஆகியோர், அதன்பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன் – “சிறுகக் கட்டி பெருக வாழ்“ என்கின்ற சான்றோர் வாக்குப்படி இந்த வீட்டை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அழகுற அமைத்துள்ள பயனாளியைப் பாராட்டியதுடன், இதேபோன்று, அரசாங்கம் வழங்கும் வீட்டுத் திட்டத்துக்குரிய நிதியைப் பெற்று தங்களுடைய வீடுகளை ஏனையோரும் கட்டி முடித்துப் பயன்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அத்துடன் வீட்டுத்திட்டத்துக்கு வழங்கப்படுகின்ற 6 இலட்சம் ரூபா போதாது என்று நினைத்து கிடைப்பதையும் இழக்காமல், கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு தமக்கான வீடுகளை பொதுமக்கள் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், கிளிநொச்சி மாவட்டத்துக்கு இணைத் தலைவராக அமைச்சரவை அந்தஸ்துள்ள மூத்த அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, போரினால் அழிவுண்டு வறுமையின் பிடியில் சிக்குண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அனைவரும் இணைந்து பாடுபட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற ஏனைய பல வீடுகளும் விரைவில் பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என்று இந்த நிகழ்வில் இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: