கிருமித் தொற்றால் மாணவன் உயிரிழப்பு – அனலைதீவில் சோகம்!

நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 வயது பாடசாலை மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். காலில் ஏற்பட்ட காயத்தினூடாக மாணவனின் உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
அனலைதீவு 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தவராசா நாகசுலக்சன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தான்.
நாகசுலக்சன் அனலைதீவு சதாசிவம் மகாவித்தியாலயத்தில் ஜி.சி.ஈ சாதாரண தர வகுப்பில் கற்றார். கடந்த 4 ஆம் திகதி விளையாடிக்கொண்டிருந்த போது தடக்கி வீழ்ந்து காலில் காயமடைந்தார். மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்றார். கடந்த 6 ஆம் திகதி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து உடனடியாக அனலைதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி நேற்று நாகசுலக்சன் உயிரிழந்தார்.
சிறுவனின் சாவு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறைப் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான் யாழ்ப்பாணம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி பிரேமகுமார் மூலம் விசாரணைகளை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி பிரேமகுமார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார். பரிசோதனைகளில் காயத்தின் மூலம் ஏற்பட்ட கிருமித் தொற்றாலேயே சிறுவன் இறந்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|