“கிராமத்துக்கு ஒரு வீடு” – பயனாளிகள் தெரிவில் மோசடி – பட்டியலைப் பகிரங்கப்படுத்தி மக்கள் கருத்த அறிய ஆளுநர் உத்தரவு !

Wednesday, March 10th, 2021

“கிராமத்துக்கு ஒரு வீடு” திட்டத்தில் யாழ். குடாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட 400 பயனாளிகளின் பட்டியலையும் பகிரங்கமாக மக்கள் முன்பு காட்சிப்படுத்தி, மக்கள் கருத்தறிந்தால் மட்டுமே இணைத்தலைவர் என்ற வகையில் அதற்கான ஆவணத்தில் ஒப்பமிடுவேன் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்தாவது –

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 435 கிராம சேவகர் பிரிவிலும் இருந்து தலா ஒரு குடும்பம் என்ற வகையில் தேர்வு செய்யும் பட்டியலில் ஆளுநர் அனுமதி பெறுவதற்காக மாவட்டச் செயலாளர் ஆளுநரிடம் எடுத்துச் சென்றுள்ளார். இதன் போதே ஆளுநர் இந்தப் பட்டியலில் ஒப்பமிட மறுத்துள்ளார்.

இந்தப் பயனாளிகளின் பட்டியலை கடந்த ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியை பெற்றிருக்கலாம். அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்களில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இவை இல்லாது வெறுமனே ஒப்பமிட முடியாது.

ஏனெனில் கிராமங்களில் வறுமையான குடும்பங்கள் உள்ள போதும் வேறு நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று முறையிடப்படுகின்றது என்றுமு; அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் தற்போது தான் பட்டியல் ஒப்புதலிற்கு வருகின்றது. ஆனால் பயனாளிகளே தெரிவு செய்யப்பட்டு விட்டனர் எனத் தெரிவித்து அடிக்கல் நாட்டப்படுகின்றது. இதனால் இந்தப்பட்டியலில் நான் ஒப்பமிடமாட்டேன். இந்தப்பட்டியலை கிராம சேவகர் ரீதியாகக் காட்சிப்படுத்துங்கள். மக்கள் கருத்து வரட்டும். அதன் பின்பு ஒப்பமிடுகின்றேன் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீட்டுத்திட்டப் பட்டியலானது உண்மையில் தேவையின் அடிப்படையில் தயாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழும் நிலையில் அதன் உண்மைத்தன்மை கண்டறிய உடனடியாக கிராம சேவகர் அலுவலகங்களில் தேர்வானவர்களின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்து பட்டியலை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என அந்த செய்தியில் அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: