கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு “12,000 பாலங்கள்” உருவாக்கும் தேசிய செயல்திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச!

Friday, April 16th, 2021

நாடளாவிய ரீதியில் 5000 கிராம பாலங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் அதிகளவு பாலங்களுக்கான கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளமையால் குறித்த வேலைத்திட்டத்தில் மேலும் பல பாலங்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தற்கு அமைவாக தற்பொழுது நாடு முழுவதும்  ஐந்து ஆயிரம் பாலங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதிகளவான பாலங்களை புனரமைப்பதற்கான கோரிக்கைகள் எமக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.  அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தில் 12 ஆயிரம் பாலங்களை உள்வாங்கி நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

குறித்த செயல்திட்டம் 4 வருடத்தில் பகுதி பகுதியாக பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாலமும் வாகனங்கள் செல்லும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

குறிப்பாக கிராம மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட வேண்டும் என்பதை முனைப்பாக கொண்டு “ஜனாதிபதியின் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி” திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது என தெரிவித்திருந்த பசில் ராஜபக்ச உற்பத்தி பொருட்களை சேதாரமுமின்றி சந்தைக்கு கொண்டு செல்வதில் கிராமத்து மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டதையடுத்து “12,000 பாலங்கள்” உருவாக்கும் தேசிய செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: