காவற்துறை அதிகாரிகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

Monday, July 31st, 2017

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவர் மீது ரோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.இவ் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் குறித்த காவற்துறை உத்தியோகத்தர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ் வாள்வெட்டுச் சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை மணியளவில் கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவற்துறை காண்ஸ்டபிள் சுரேன் மற்றும் காவற்துறை.காண்ஸ்டபிள் ரட்ணாயக்க தம்பிக்க ஆகிய இரு காவற்துறை உத்தியோகத்தர்களுமே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானவர்களாவர்.இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது  தமக்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரனை செய்வதற்காக கொக்குவில் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் குறித்த இரு காவற்துறை உத்தியோகத்தர்களும் சென்றிருந்தார்கள்.

இதன்போது கொக்குவில் நந்தாவில் பகுதியில் சிலர் மது அருந்தி குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என குறித்த காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு அப் பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் கூறியுள்ளார்கள். இதனையடுத்து அப் பகுதிக்கு குறித்த இரு காவற்துறை உத்தியோகத்தர்களும் சென்று பார்த்த போது அங்கு சில இளைஞர்கள் மது அருந்திகொண்டிருப்பதையும் அவர்களிடம் வாள் போன்ற ஆயுதங்கள் இருப்பதனையும் அவதானித்த இப் காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி காவல் நிலையம் நோக்கி சென்றுள்ளார்கள்.

இச் சமயத்திலேயே குறித்த காவற்துறை உத்தியோகத்தர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்று அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளது.இதனையடுத்து படுகாயமடைந்த இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவ் இரு காவற்துறை உத்தியோகத்தரில் ஒருவருக்கு கை, கால், துடை பகுதிகளில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கோப்பாய் காவற்துறை தெரிவித்துள்ளனர்

Related posts: