காற்று மாசுபாடு அதிகரிப்பு – துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை – சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கும் ஆராயப்படுவதாக சற்றாடல் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 26th, 2022

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, துவிச்சக்கரவண்டி பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, துவிச்சக்கரவண்டி ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒரு வாகனத்தில் கிலோமீட்டருக்கு 103.56 ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கரவண்டி பாவனையினால் காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுத்தல் போன்று தொற்றாத பல நோய்களை கட்டுப்படுத்த காணப்படும் வாய்ப்புகள் காரணமாக துவிச்சக்கரவண்டி பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். .

இதன்படி துவிச்சக்கரவண்டி பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236.48 ரூபாவை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, இத்திட்டத்தை ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: