காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கிகள் – வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, November 30th, 2021

காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையில் பயணிப்போருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர்.

காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக பாதை சேவையினை நீண்ட காலமாக நடாத்தி வருகின்றனர்.

குறித்த பாதை சேவை ஊடாக உத்தியோகஸ்தர்கள், ஊர்காவற்துறை நீதிமன்றம் செல்வோர் , மாணவர்கள் என பல தரப்பினரும் சென்று வருகின்றனர்.

சுமார் 500 மீற்றர் தூரமான இந்த பாதை சேவை நடைபெறாவிடின், இரண்டு ஊர்களுக்கு இடையில் பயணிப்போர் யாழ்ப்பாணம் சென்றே, செல்லவேண்டும். அதற்காக அவர்கள் சுமார் 40 கிலோ மீற்றர் தூரம் சுற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

இரண்டு ஊர்களுக்கு இடையிலும் நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த போதிலும், பாலம் அமைப்பதற்கான பணிகள் எவையும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.   

இதேவேளை , திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி களப்பில் சேவையில் ஈடுபட்டு வந்த பாதை கடந்த 23 ஆம் திகதி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்தவர்களில் பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

பாதையில் பயணித்தவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படாது, பாதுகாப்பு இன்றியே அவர்கள் பயணித்ததாலையே விபத்தில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: