காப்பாளர்களுக்கு நியமனம் வழங்கத் தவறின் சகலரும் ஒரே நாளில் பணியிலிருந்து விலகுவர் – தொடருந்துக் கடவைக் காப்பாளர் ஒன்றியம் !

Wednesday, March 21st, 2018

தமக்கு நிரந்தர நியமனம் வழங்க எந்தவொரு அமைச்சும் இந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரச தலைவருக்கு இது பற்றிக்கூறியும் அவருக்கு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளார். அதனால் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒரே தடவையில் காப்பாளர் பணிகளிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளோம். அதன்பின்னர் கடவைகளில் பொதுமக்களின் உயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நாம் பொறுப்பாக மாட்டோம். விலகுவது தொடர்பில் மாவட்டங்களின் சங்கங்களுடன் தற்போது கலந்துரையாடிவருகிறோம் என வடக்குக் கிழக்கில் சேவையாற்றும் தொடருந்துக் கடவைக் காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் றொஹான் றாஜ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு கிழக்கில் உள்ள தொடருந்துக் கடவைகளில் 2 ஆயிரத்து 638 பேர் கடமைபுரிகின்றனர். இவர்கள் 5 வருடங்களாகப் பணிபுரிகின்றபோதும் தமக்கு நிரந்தர நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை. நாளாந்தம் 250 ரூபா வீதம் மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை எமக்கு எப்படிப் போதுமானது?

நாளாந்தம் வாழ்க்கைச்செலவு அதிகரித்து வரும் நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் போதாது என்று சம்பள அதிகரிப்பு வழங்கும் நிலையில் தமக்கு மட்டும் இந்தத்தொகை எப்படிப் போதுமானது.

நியமனம் வழங்குமாறு நிமல் சிறிபால டீ சில்வா உள்ளிட்ட அமைச்சர்களுடன் பேசினோம். உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. தொடருந்துத் திணைக்களமும் நடவடிக்கை எடுக்கவில்லை. எத்தனையோ போராட்டங்கள் செய்தோம் தொடருந்தை வழிமறித்து பேராட்டம் செய்தோம் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரச தலைவரைச் சந்தித்து மனுக் கொடுத்தோம் கடவைகளில் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம், அத்தகைய ஊழியர்களுக்கான நியமனம் உட்பட பல விடயங்களையும் அரச தலைவருக்கு எடுத்துக் கூறினோம். கவனிக்கிறேன் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். இன்றுவரை அவர் கவனிக்கவில்லை.

கடவைக் காப்பாளர்களில் பலரது குடும்பங்கள் காப்பாளர்களை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவாவறிருக்க அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமையும் சம்பள அதிகரிப்பு இல்லாமையும் அவர்களை மன உழசை;சலுக்கு ஆளாக்கியுள்ளது. மன உழைச்சலுடன்தான் அவர்கள் கடவைகளில் பயணிகளின் நலன் கருதி பணியில் ஈடுபடுகின்றனர். இதன் தார்ப்பரியம் தற்போது பயணிகளுக்கும் தெரியாது தான். தாங்கள் சென்ற பின்னர் கடவைகளில் எந்த நிமிடம் தொடருந்து வரும்? என்று கடவைகளைக் கடக்கும் பொதுமக்களான பயணிகள் ஒவ்வொரு தடவையும் பய உணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் இடங்கொடுக்கவுள்ளனரா?

எமது புள்ளிவிவரங்களின்படி கடந்த 5 வருடங்களில் 49 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 35 பேர் உயரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் தொடருந்துத் திணைக்களத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் கடமை புரியும் கடவைகளிலும் தன்னியக்க கருவிகள் இயங்கும் கடவைகளிலுமே இடம்பெறுகின்றன. தாம் பணிபுரியும் இடங்களில் இத்தகைய விபத்துக்கள் இடம்பெறவில்லை.

5 வருடங்களாக நாளாந்தம் 250 ரூபா பாதுகாப்பு அமைச்சின் நிதியிலிருந்து பொலிஸாரால் எமக்கு வழங்கப்படுகின்றது.

5 வருடங்களுக்கு முன்னர் பணிக்கு அமர்த்தும் போது 3 மாதங்களில் சம்பள உயர்வும் 6 மாதங்களில் நிரந்தர நியமனமும் வழங்கப்படும் என்று கூறியே இந்தப் பணிக்குச் சேர்த்தனர். அது இன்னும் நடக்கவில்லை.

முன்னர் போக்குவரத்து அமைச்சராக இருந்த குமார வெல்கம தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறியிருந்தார். பின்னர் நிமல் சிறிபால டீ சில்வா போக்குவரத்து அமைச்சரானதன் பின்;னர் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால் எம்மை விடுத்து 1200 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கியுள்ளார். எமக்கு நியமனம் வழங்காது அவர் பழிவாங்குகிறார்.

எமக்கு நியமனம் தந்து தனியே கடவைகளில் மட்டும் வேலை தாருங்கள் என்று கேட்கவில்லை. தொடருந்து பயணிக்கும் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு, துப்பரவு உள்ளிட்ட ஏனைய ஊழியர்கள் செய்வதைப் போன்று தாமும் செய்யத் தயார். கடவைகளையும் கவனிக்க முடியும். இல்லாவிடில் ஏதாவது ஒரு அரச திணைக்களத்தில் சிற்றூழியர்களாக என்றாலும் நிரந்தரமாக அமர்த்த வேண்டும்.

சமுர்த்திப் பயனாளிக்கு 22 ஆயிரத்து 500 ரூபா வழங்கி கடவைகளில் பாதுகாப்புப் பொறுப்பு வழங்க அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் தமக்கு சமுர்த்தியைத் தந்து அந்தப் பணியை ஒப்படையுங்கள். தாம் அந்தப் பணியைச் செய்கிறோம். அதைவிடுத்து பழிவாங்காதீர்கள் என்று றொஹான் மேலும் தெரிவித்தார்.

Related posts: