காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் கைது!

Wednesday, January 18th, 2023

யாழ்ப்பாணம் மாநகரில் இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகரில் போலி உறுதி முடித்து காணி மோசடிகள் இடம்பெற்றன. அத்தகைய வழக்குகளை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வழக்குகளில் பொலிஸார் பலரைக் காப்பாற்றுவதற்கு முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து நீதிமன்றின் உத்தரவினால் சட்டத்தரணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகளை விசாரணை செய்யும் பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழக்குடன் தொடர்புடைய தரப்பிடம் பல இலட்சம் ரூபாய் பணத்தை கையூட்டாகப் பெற முயன்ற போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: