காணியற்ற 186 குடும்பங்களுக்காக 116 மில்லியன் ரூபா செலவில் காணிகள் கொள்வனவு செய்து வழங்கிவைப்பு- யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!
Saturday, November 6th, 2021யாழ் மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவுக்காக 186 குடும்பங்களுக்காக சுமார் 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் ஆகியோர் காணி உரிமங்களை வழங்கி வைத்திருந்தனர். குறித்த நிகழ்வில் ஆரம்ப உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ் மாவட்ட செயலகத்தால் காணியற்ற குடும்பங்களுக்காக அரச நிதியில் காணி கொள்வனவு செய்து வழங்கும் செயற்திட்டத்திற்கு அமைய 186 குடும்பங்களுக்கு இரண்டு பரப்பு வீதம் கொள்வனவு செய்வதற்காக 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் கணக்கெடுப்பின் பிரகாரம் மேலும் சுமார் 126 குடும்பங்களுக்கு காணி வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.
அவர்களில் 46 குடும்பங்களுக்கு காணிகள் அடையாளப் படுத்தப்பட்டுவரும் நிலையில் விரைவில் அவர்களுக்கான காணிகள் வழங்கி வைக்கப்படும்.
அத்துடன் காணி வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 10 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளதோடு அவர்களுக்குத் தேவையான மலசலகூட வசதிகள் மின்சாரம் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
எனவே யாழ் மாவட்டத்தில் காணி அற்ற மக்களுக்காக கட்டங்கட்டமாக காணிகள் வழங்கி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த நிகழ்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|