காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் – ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்பட்டு நிலையில், இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தை போலல்லாது காணாமல் போனோர் அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்பாக கண்காணித்து, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமற்போனவர்கள் எந்த காரணத்திற்காக காணாமல்போனார்கள் என்பதை பற்றி விசாரிக்க தேவையில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமையை உறுத்திப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி  சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதானது, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் போனார்கள் எனபதை பார்க்காது, காணாமற்போனோரை அடையாளம் கண்டு இழப்பீட்டை வழங்குவோம் எனவும் அமைச்சர் அலிசப்ரி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: