காணாமற்போன 6 மீனவர்களில் நால்வர் தொடர்பில் தகவல்கள் இல்லை – கடற்படை!
Tuesday, January 10th, 2017ஒலுவில் துறைமுகத்திலிருந்து காணாமற்போன ஆறு மீனவர்களில் நால்வர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கடற்படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவர்களுடன் கடலில் நிர்க்கதியானபோது மாலைத்தீவு கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களும் இன்று நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மாலைத்தீவுக்கு சென்றுள்ள பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் குறிப்பிட்டார்.
இந்த மீனவர்கள் ஆறு பேரும் கடந்த 24 ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றிருந்தனர்.
இவர்கள் ஆறு பேரும் மறுநாள் கரை திரும்பாத நிலையில் உறவினர்களால் கடற்றொழில் திணைக்கள மாவட்ட அலுவலகம் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.
கடற்றொழில் திணைக்களத்தின் கோரிக்கையின் பிரகாரம் கடற்படையினர் தொடர்ந்தும் மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இந்த நிலைமையின் கீழ் இரண்டு மீனவர்கள் மாலைத்தீவு மீனவர்களால் மீட்கப்பட்டிருந்தனர். ஏனைய நால்வர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
கரையோர பாதுகாப்புப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்படையினரும் தொடர்ந்து தேடுதலை மேற்கொண்டு வருவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி கூறினார்.
இதேவேளை, மாலைத்தீவில் மீட்கப்பட்டுள்ள இரண்டு மீனவர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம். எம். ஹாரீஸ் அங்கு பயணமாகியுள்ளார்.
Related posts:
|
|