காக்கைதீவு – வட்டுக்கோட்டை இருட்டைப் போக்குமாறு மக்கள் கோரிக்கை!

Thursday, December 6th, 2018

காக்கைதீவு – வட்டுக்கோட்டை வீதியை ஒளியூட்டித் தருமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

காக்கைதீவு – வட்டுக்கோட்டை வீதியை ஒளியூட்டித்தருமாறு நாம் பல தரப்பினரிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளோம். எனினும் எந்தப் பயனும் இல்லை. யாழ் நகரப் பகுதிக்குச் சென்று திரும்பும்போது சீரற்ற வீதியால் பெரும் போக்குவரத்து அசௌகரியத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக தமது வேலைகளுக்காக நகரப் பகுதிக்குச் சென்று இரவு நேரங்களில் திரும்புவோரின் பாடு பெரும்பாடாக உள்ளது. குப்பைகள் ஆங்காங்கே எறியப்பட்டுள்ளன. வீதி காப்பெற் வீதியாக அல்லாமல் மேடுபள்ளமாக உள்ளது. இதனால் அவ்வவ்போது சிலர் வீதி விபத்துக்களுக்குள் சிக்கியுள்ளனர்.

சிலர் குப்பைகளுடன் மோதுப்பட்டு விழுந்தெழும்பியுள்ளனர். வீதி கும்மிருட்டாக காணப்படுவதாலேயே இந்த அவல நிலை. பொம்மைவெளி குப்பை சேகரிக்கும் இடத்துக்கு முன்னால் மட்டும்தான் ஒளியூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு ஏனைய பகுதிகளுக்கும் ஏன் ஒளியூட்ட முடியாது.

சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் “காக்கைதீவு காட்சித் தீவாக மாறும் என்று தெரிவித்திருந்தார். இதுதானா அந்த மாற்றம்? காக்கைதீவு – வட்டுக்கோட்டை வீதிதான் இவ்வாறு பின்னடைவான நிலையில் உள்ளது எனில் நவாலியூடாக வட்டுக்கோட்டையை நோக்கிப் பயணிக்கலாம் என்றால் சங்கரத்தை வயல்வெளிகள் இருள் மண்டிக் கிடக்கின்றன. கள்வர்கள், விசப்பிராணிகளின் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது அது. எனின் நாம் எவ்வாறு சீரான பயணத்தை மேற்கொள்வது? என்றனர்.

குறித்த வீதியை விரைவில் அபிவிருத்தி செய்வதாகவும் வீதி அபிவிருத்திக்கான கேள்விகோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: