கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கல்வி தகைமைகள் ஆய்வு – கல்வி பொதுச் சேவைகள் ஆணைக்குழு!

Thursday, July 19th, 2018

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கல்வி தகைமைகள் குறித்த தனிப்பட்ட கோப்பினை கல்வி பொதுச்சேவைகள் ஆணைக்குழு ஆராயவுள்ளது.

கல்வித்துறை சார் அதிகாரிகளின் நியமனத்தில் அரசியல் பழிவாங்கல் இடம்பெறுவதாகவும் இதன்மூலம் தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் தெரிவிக்கையில்:

அதிபர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட கல்வித்துறைசார் அதிகாரிகள் நியமனத்தில் தற்போது அரசியல் பழிவாங்கலே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்வித் துறையில் அரசியல் கைக்கூலிகளின் தலையீட்டை நாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே தற்போது நியமனம் வழங்கப்படுகின்றது.

இவர்களில் 27 பேர் சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தியடையாதவர்களாக காணப்படுகின்றனர்.

இவ்வாறானவர்களின் கல்வி நிலைகள் தொடர்பில் ஆராயுமாறும் கல்வி பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் நாம் கோரியிருந்தோம். அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1014 பேருக்கு கல்வி நிர்வாக சேவையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு நியமனம் பெற இருப்பவர்கள் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாதவர்களாகவும் சிலர் பரீட்சைக்கே சமூகமளிக்காதவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறான நியமனங்கள் மூலம் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுவர் என்பது கவலைக்குரிய விடயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: