கல்வி சீர்திருத்த செயற்பாடு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, May 28th, 2022

கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதுமான பல்வேறு விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக நாடு எதிர்நோக்கும் முக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இது அடுத்த சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைபெறும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, அடுத்து இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நிறைவுசெய்யப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் பகுதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கல்வி சீர்திருத்த செயல்முறை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பாடப்பிரிவு எதுவாக இருந்தாலும் அனைத்து மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்தை கற்கக்கூடிய வகையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: