கல்வித்துறையினர் மீண்டும் வேலைநிறுத்தம் ? – இலங்கை ஆசிரியர் சங்கம்!
Saturday, July 21st, 2018முறையற்ற வகையில் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்கள் என கூறிக்கொண்டு தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு கல்வித் துறையில் நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் இன்னும் கைவிடப்படவில்லையெனவும் இதனால் மீண்டும் 26 ஆம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கத்தின செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சங்கத்தினரால் தமது போராட்டம் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் வகையில் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கானவர்கள் என்ற பெயரில் அரசியல் ஆதரவாளர்கள் 1,014 பேருக்கு கல்வி நிர்வாக சேவையில் நியமனங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் 26 ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்போதும் தீர்வு கிடைக்காவிட்டால் பரீட்சைகளை புறக்கணிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 4 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இந்த சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|