கல்விசாரா ஊழியர் வேலை நிறுத்தத்தால் இசற் புள்ளி வெளியாவதும் தாமதமாகலாம்!

Saturday, March 31st, 2018

நாடெங்குமுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கான பிரவேச அனுமதி வழங்கும் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதனால் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேச அனுமதி கோரி அனுப்பப்பட்டுள்ள சுமார் அறுபதினாயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அலுவலகங்களில் குவிந்துள்ளதாக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அவற்றை வகைப்படுத்தல், பரிசீலனை செய்தல் மற்றும் பிரவே அனுமதி வழங்கும் செயற்பாடுகளை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மானிய ஆணைக்குழுவைச் சேர்ந்த சில அதிகாரிகள் பிரபல சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கடந்த க.பொ.த உயர்தரம் பரீட்சைகளுக்குத் தோற்றியிருந்த மாணவர்களில் சுமார் எழுபதாயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்துக்கான தகைமைப் பெறுபேறுகளைப் பெற்றிருந்தார்கள் எனவும் இவர்களால் அனுப்பப்பட்டுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆணைக்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்த சந்தர்ப்பத்திலேயே கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதால் சுமார் அறுபதினாயிரம் விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலனை செய்யப்படாமல் முடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் எதிர்வரும் மே மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ள குறைந்த பட்ச இசற் புள்ளியைத் தீர்மானிக்கும் நடவடிக்கையையும் மானிய ஆணைக்குழு தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மே மாத இறுதிக்குள் இசற் புள்ளி விபரங்களை மானிய ஆணைக்குழு வெளியிடுவதும் கேள்விக் குறியாகியுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: