கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – நாளைமுறுதினம்முதல் வழமைபோற்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அரச அதிபர் தெரிவிப்பு!
Thursday, August 5th, 2021திட்டமிடப்படாத வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொண்டு வந்த நீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி காலத்தில் சண்டிலிப்பாய் மற்றும் யாழ் நீதிமன்றத்துக்கு சொந்தமான காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்ட சுமார் 85 குடும்பங்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்கலை யாழ் மாவட்ட செயலகம் மானிப்பாய் பிரதேச செயலகத்தினூடாக முன்னெடுத்து வந்திருந்தது.
இந்நிலையில் நீர் வழங்கலுக்கான உடன்பாடு கடந்தவாரம் முடிவுற்றமையால் குறித்த மக்களுக்கான குடிநீர் வழங்கலில் பெரும் குழப்பநிலை உருவானது. இதையடுத்து மக்களுக்கான குடிநீர் வழங்கல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து குறித்த பகுதியில் வாழும் மக்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த நீர்வழங்கல் ஒருவாரகாலமாக பெரும் இழுபறி நிலையில் இருந்துவந்தது.
இதையடுத்து குறித்த பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
மக்களின் நியாயமான கோரிக்கையை கவனத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரையின் அடிப்படையில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் மானிப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர் குறித்த பிரதேச கிராம உத்தியோகத்தர் பொருளாதார உத்தியோகத்தர் உள்ளிட்டோருடன் அப்பகுதிக்கு இன்றையதினம் சென்று அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
இதன்போது அப்பகுதி மக்கள் தமக்கான குடிநீர் பிரச்சினையை முதன்மையாக கொண்டு பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில் சிவகுரு பாலகிருஸ்ணன் யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்களது அவசிய தேவை தொடர்பில் சுட்டிக்காட்டி நீரை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார்.
இதையடுத்து குறித்த நீர் வழங்கலை எதிர்வரும் சனிக்கிழமைமுதல் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக அரச அதிபர் மகேசன் உறுதியளித்திருந்த நிலையில் அப்பகுதி மக்களின் நீர் வழங்கல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றது.
இதனிடையே இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீரை நன்னீராக்கும் ஆரோபிளான்ற் திட்டத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வருவதாகவும் அது தொடர்பில் உரிய தரப்பினருடன் தற்போது பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்த சிவகுரு பாலகிருஸ்னன் தாழ் நிலமாக காணப்படும் குறித்த மக்கள் வாழும் காணி நிலங்களை மழை நீர் தேங்கி நில்லாத வகையில் உயர்வான சமாந்தரமான நிலப்பரப்பாக உருவாக்குவதற்கான மணலை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் 54 மழை நீர் சேகரிப்பு தாங்கிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பாலகிருஸ்னன் இரு கிராம பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த கிராமத்தை ஒரே பிரிவாக மாற்றித்தருமாறு மக்கள் விடுத்த கோரிக்கையையும் அமைச்சரது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்
அத்துடன் ஜனநாயக வழிமுறை கருத்துச் சுததந்திரம் என்று கூறி போராட்டங்களை செய்வதனூடாக ஆக்கபூர்வமான விடயங்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர இருப்பதையும் இல்லாமல் செய்துவிடக் கூடாது எனவும் சுட்டிக்காட்டிய சிவகுரு பாலகிருஸ்னன். கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியானதாக்கி அதனூடாக மேலும் தேவையானவற்றை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் லியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.;
Related posts:
|
|