கலைஞர் கருணாநிதி வைத்தியசாலையில் !

Friday, July 27th, 2018

திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் காரணமாக 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவரைப் பார்க்க யாரும் வர வேண்டாம் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதியின் உடல் நிலையைக் கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருணாநிதியின் உடல் நலம் குறித்து கடந்த 2 நாள்களாக வெவ்வேறு செய்திகள் வந்தன. அந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இந் நிலையில்தான் காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, அவருக்கு டிரக்யாஸ்டமி குழாய் மாற்றி பொருத்தப்பட்டது. அது முதல் கருணாநிதிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கோபாலபுரம் வீட்டில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related posts: