கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்!

Tuesday, August 7th, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை திங்கள்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.

கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமை தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, அவரது முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவ ரீதியாகச் சமாளிப்பது சவாலாக உள்ளது. கருணாநிதிக்கு தொடர் கண்காணிப்பும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதியின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி குழாயை மாற்றிவிட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றைய தினமே கருணாநிதி வீடு திரும்பினார்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி கருணாநிதிக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. அவரின் சிரை வழியே மருந்துகள் செலுத்தப்பட்டன.

கடந்த ஜூலை 28-ஆம் தேதி அதிகாலையில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்தத்தில் கலந்துள்ள கடும் நோய்த்தொற்று (சீரியஸ் செப்ஸிஸ்’) கலந்துள்ள போதிலும், ஜூலை 29-இல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், தீவிர சிகிச்சையில் அவரின் உடல் நலம் சீரானது. கடந்த ஆக.2-இல் கருணாநிதியின் ரத்த இயக்கங்களைச் சீராக்கும் முயற்சியாக அரை மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) இரவிலிருந்து கருணாநிதியின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

கடும் நோய்த்தொற்றால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டதாகவும் ரத்த தட்டணுக்கள் குறைந்து அதற்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

அவரின் நாடித் துடிப்பிலும் திங்கள்கிழமை (ஆக.6) காலை தொய்வு ஏற்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால், கருணாநிதிக்குச் செலுத்தப்படும் மருந்துகள் மெதுவாகவே செயல்படுகின்றன.

கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதும், அவர் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி ஆகியோர் கருணாநிதியின் காரிலேயே தயாளு அம்மாளை அழைத்து வந்தனர். கருணாநிதியைப் பார்த்து தயாளு அம்மாள் கண்ணீர் வடித்தார். பிறகு, இல்லத்துக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டார்.

நிதின் கட்கரி நலம் விசாரிப்பு: மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மருத்துவமனையில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் திங்கள்கிழமை மாலையில் இருந்து தலைவர்களும் தொண்டர்களும் குவிந்தனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்சாய் ரெட்டி, சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தனர். தொண்டர்களும் பெருமளவில் மருத்துவமனையில் குவிந்தனர். கருணாநிதி நலம்பெற வேண்டி, பலர் கண்ணீர் விட்டு கதறினர்.

கருணாநிதி உடல் நலம் குறித்த தகவல் கிடைத்ததும் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவசரம் அவசரமாக சென்னை திரும்பினர்.போக்குவரத்து மாற்றம்: தலைவர், தொண்டர்கள் வருகை அதிகரித்ததால் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இருந்து லஸ் செல்லும் பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவலர்களுக்கு அறிவுறுத்தல்: காவலர்கள் அனைவரையும் இரவு முழுவதும் பணியில் இருக்குமாறு காவல்துறை உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: