கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிறேன் – ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாகவும் இதனை தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மக்களின் பெருநாளான ஹஜ் பெருநாளை தினம் குறித்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அனைத்து சமயத் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொதுவான நன்நெறிகளை எமக்குத் தந்துள்ளனர்.
சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றின் பங்களிப்பு மகத்தானதாகும். இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும்.
இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் காலம் உதவும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக, முன்னரைப் போலவே பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது, அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்காகக் கொண்டதாகும். இந்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, இந்தப் பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறு நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|