கலந்துரையாடலுக்கு வருமாறு வடக்கு முதல்வருக்கு அழைப்பு!
Friday, May 27th, 2016மாகாண பதவி நிலை அலுவலர்களாக இருந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பதவி நிலை குறைக்கப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடலொன்றினை மேற்கொள்ள முன்வாருங்கள் என கிராம அபிவிருத்தி உத்தியோக்தர்கள் சங்கம் வட மாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக் கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாணசபையினால் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்படி பதவிகள் யாவும் ஒரே சம்பளம் மற்றும் தரம் வகுதிக்குள் IMN-5 (2006) அடிப்படைச் சம்பளம் ரூ.16720 இதுவரை காலமும் இருந்து வந்துள்ளன.
தற்போதைய வடமாகாணசபை இயங்க தொடங்கிய பின்னர் இப்பதவிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான ஆளணியை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் 15.03.2016 இல் வடமாகாண சபை அதிகார பூர்வ இணையத்தளத்தில் கோரப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் சமூகசேவை உத்தியோகத்தர் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காக தரம் 11 பதவி நிலையிலும், சம்பளநிலை MN-5 (2006) (அடிப்படைச் சம்பளம் ரூ.16720) வகுதிக்குள்ளும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காக தரம் – 111 என்ற என்ற இதுவரை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இல்லாததும் நிலை குறைக்கப்பட்டதுமான சம்பள அளவுத்திட்டம் MN-4 (2006) (அடிப்படைச் சம்பளம் ரூ.15325 ) வகுதிக்கு மாற்றப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்தகைய சேவைத் தரக்குறைப்பு நடவடிக்கை கீழ்வரும் நிலைமைகளை ஏற்படுத்துகின்றமையை தங்கின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
- ஒரே வேலையை செய்யும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இரண்டு வகையான சம்பளம் வழங்கப்படுவதுடன் தங்போது பணியாற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தாகள் மாகாண பதவிநிலை உத்தியோகத்தர்களாகவும் IMN-5 (2006) (அடிப்படைச் சம்பளம் ரூ.16720 இனி நியமனம் செய்யப்படும் புதிய உத்தியோகத்தர்கள் மாகாண பதவிநிலை சாராத சாதாரண உத்தியோகத்தர்களாகவும் IMN-4 (2006) (அடிப்படைச் சம்பளம் ரூ.15325 காணப்படுவார்கள்.
இது உத்தியோகத்தர்களை மனோ ரீதியாக பாதிப்பதுடன் எதிர்காலத்தில் அலுவலக வேலைகளிலும் பாரிய சிக்கல் நிலைகளை ஏற்படுத்தும்.
- ஒரே தர நிலையில் இதுவரை பணியாற்றிய சமூகசேவை உத்தியோகத்தர் தர நிலையிலிருந்து கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரக்குறைப்பு செய்யப்படுவது எவ்வகையிலும் பொருத்தமற்றதாகும்.
தாங்கள் இப்பிரச்சினையை இலங்கை முகாமைத்துவ திணைக்களம் மற்றும் சம்பளங்கள் மற்றும் பதவிகள் ஆணைக்குழு, வடமாகாண பொதுசேவை ஆணைக்குழு என்பவற்றுடன் கலந்துரையாடி தீர்ப்பதற்கு ஆவன செய்து தருமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
வெளிக்கள கடமை நாட்களை 12 நாட்களாக குறைத்தல்
பிரதிப் பிரதம செயலாளர், மாகாண பொது நிர்வாக செயலகம், வடமாகாணம் அவர்களின் 10.11.2005 திகதிய NP/02/2008/18 இலக்க சுற்றுநிருபம் மற்றும் பிரதம செயலாளர், வடமாகாணம் அவர்களின் NP/02/18/GN/01 இலக்க 24.03.2009 திகதிய திணைக்கள தலைவருக்கான சுற்றுநிருபம் என்பவற்றுக்கு அமைவாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு மாதம் ஒன்றுக்கான கடமை நாட்கள் 18 நாட்களாகவும் களப்பணிக்காக பயணம் செய்ய வேண்டிய மொத்த பயணத்தூரம் 500 கிலோமீற்றர் ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
வாரம் ஒன்றில் இரு நாட்கள் (திங்கள், புதன்) அலுவலக கடமை நாட்களாக உள்ளதுடன் மாதத்தில் ஒரு நாள் மாவட்ட மட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நடைபெறும் நாளாக உள்ளது. மாதம் ஒன்றில் அலுவலக நாட்கள் 20 தொடக்கம் 22 நாட்களாக ஆக அமைகையில் 18 நாட்கள் களப்பணி ஆற்றுவது சாத்தியமற்ற ஒன்றாகும்.
ஆதலால் களப்பணி நாட்களை 10 அல்லது 12 நாட்களாக குறைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்குறித்த சுற்றுநிருபங்களில் சில சமாந்தர சேவை உத்தியோகத்தர்களுக்கு 8 நாட்கள் களப்பணி நாட்களாக உள்ளமையை கவனத்தில் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாதம் ஒன்றில் பயணிக்க வேண்டிய மொத்த களப் பயண தூரம் 500 கிலோமீற்றர் வரையறுக்கப்பட்டுள்ளது. இது உயர்ந்த பட்ச தூரமாகும். யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளும், பளை, வவுனியா நகர் மற்றும் மன்னார் நகர் போன்ற பிரிவுகளில் இத்தூர இலக்கை அடைவது சாத்தியமற்றதாக உள்ளது.
இதனால் மொத்த மாதாந்த பயணிக்க வேண்டிய தூரத்தை 200 கிலோமீற்றர் – 250 கிலோமீற்றர் ஆக வரையறுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எமக்கான போக்குவரத்து படி ரூ.1500 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இதர மாகாணங்களில் குறிப்பாக வட மேல் மாகாணத்தில் இத் தொகை ரூ.2600 ஆகவும், வட மத்திய மத்திய மாகாணத்தில் இத் தொகை ரூ.2400 ஆகவும் உள்ளது. ஆகவே எமது மாதாந்த பிரயாண படியை உயர்த்த ஆவன செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
02) விடுமுறை நாட் கொடுப்பனவு
பதவி நிலை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைநாள் கொடுப்பனவு தாபனக்கோவை, அத்தியாயம் – VIII பிரிவு – 9 இன் பிரகாரம் மாதமொன்றில் திணைக்களத் தலைவர் அனுமதியுடன் ஒரு நாளும், அமைச்சு செயலாளரின் அனுமதியுடன் ஒரு நாளுமாக மொத்தம் இரு நாட்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை எமக்கு பெற்றுக்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏனெனில் சனி ஞாயிறு தினங்களில் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அத்துடன் ஏனைய சமாந்தர உத்தியோகத்தர் களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
03) தொலைபேசிப் படி
பதவி நிலை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான தொலைபேசி படி வழங்குவது தொடர்பில் 16.01.2015 திகதிய வடமாகாண திறைசேரி சுற்றறிக்கை இல.PK/02/2015 தொகுதி இல.07 பிரகாரம் கூறப்பட்டுள்ள தொலைபேசி கொடுப்பனவு படியினை கையடக்க தொலைபேசிக்கு பெற்றுக்கொள்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பவற்றின் நிர்வாகத்துடன் பொதுக்கூட்டங்கள், சுழற்சி கடன் அறவீடுகள், ஒப்பந்த வேலைகள் தொடர்பாகவும், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணையதள தரவேற்ற வேலைகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்த எமது சொந்தப் பணத்தையே பயன்படுத்துகின்றோம்
04) தலைமைக் காரியாலய கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்
கிராம அபிவிருத்தி திணைக்கள தலைமை அலுவலகத்தில் தலைமை காரியாலய கிராம அபிவிருத்தி அலுவலரை நியமனம் செய்வதன் மூலம் கிராம அபிவிருத்தி அலுவலர்களின் வேலைகளை இலகுவாக்க முடியும் என்பதனையும் தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம் என அக் கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயங்கள் தொடர்பாக முறையான கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டு தீர்வினை பெற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்கி தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|