கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொறுத்தமானதாக – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

மீண்டும் பாடசாலைகளை மூடுவதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விளக்கமளித்துள்ளார்.
முன்பதாக நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாது என்றும், இரண்டு வாரங்களின் பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பாடசாலைகள் மூடப்படுமா என்று கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஊடகங்கள் வினவியிருந்தன. இதற்குப் பதில் வழங்கிய அவர் –
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்ட போது கூட பிரபல பாடசாலைகள் சிலவற்றில் ஒரு சில மாணவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டது.
எனினும் இவர்கள் பாடசாலை சூழலில் தொற்றுக்கு உள்ளாகவில்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பெற்றோருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாகவே பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதே போன்று சில ஆசிரியர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டது. இதன் போது ஏனைய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறான துரிதமான செயற்பாடுகள் ஊடாக அனைத்து மாணவர்களதும் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
எனவே தற்போதுள்ள சூழலிலும் இதே போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம்.
அதேநேரம் பெற்றோர்கள் , மாணவர்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. பாடசாலைகளில் அவசர மருத்துவ தேவைக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே மீண்டும் பாடசாலைகளை மூடி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொறுத்தமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|