கருவாடு கடைகளில் பொதுச் சுகாதாரப் பிரிவு சோதனை – யாழ். நகரில் சம்பவம்!

Thursday, July 26th, 2018

பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து யாழ்ப்பாண நகரிலுள்ள கருவாடு விற்பனை நிலையங்களில் சோதனை நடத்திய பொதுச் சுகாதாரப் பரிசோதனைக் குழுவினர் கருவாடுகளைத் தூசு படியக்கூடிய வகையில் காட்சிப்படுத்தி வைத்திருந்த வியாபாரிகளைக் கடுமையாக எச்சரிக்கை செய்ததுடன் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் பற்றியும் அறிவுறுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும் குடாநாட்டிற்கு வருபவர்கள் கருவாடுகளை வாங்கிச் செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் சில சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் பழுமடைந்த கருவாடுகளை விற்பனை செய்வதாகப் பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாண மாநகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் யாழ்ப்பாண போதனா மருத்துவமனை வீதி, காங்கேசன்துறை வீதி ஆகிய இடங்களிலுள்ள பதினைந்துக்கு மேற்பட்ட கருவாட்டுக் கடைகளைச் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது தூசுபடியக்கூடிய வகையில் கருவாடுகளைக் காட்சிப்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. வியாபாரிகளைக் கடுமையாக எச்சரித்ததுடன் கருவாடுகளைக் கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டுமென்றும் பொதி செய்யப்பட்ட கருவாடுப் பைக்கற்றுகளில் சுட்டுத் துண்டுகள் வைக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts: