கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் – மேற்கத்தேய நாடுகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, July 13th, 2023

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும், தெற்கின் பூகோள விழுமியங்களுக்கு மதிப்பளிக்குமாறும் மேற்கத்தேய நாடுகளைக் வலியுறுத்தியுள்ளார்.

இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் இறையாண்மையும், சட்டத்தின் ஆட்சியும் கைகோர்த்துச் செல்கின்றன. ஒருபோதும் அதிலிருந்து விலக வழியில்லை. அப்படியானால் அனைவரும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். நமது பிரதம நீதியரசர் கூறியது போல், 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நீதிமன்ற முறையே எம்மிடம் உள்ளது. அப்படிப் பார்க்கும் போது ஆசியாவிலேயே மிகப் பழமையான சட்டக் கட்டமைப்பு இலங்கையிலேயே உள்ளது. நீதி அமைச்சரும், பிரதம நீதியரசரும் குறிப்பிட்டது போன்று சட்டத்தின் தாமதம் இன்று பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கான தீர்வுகளை உடனடியாகக் காண வேண்டும். ஒரு நாடு முன்னேற  வேண்டுமானால், சட்டத்தில் தாமதம் இருக்கக் கூடாது.

பொதுமக்கள் மட்டுமின்றி முதலீட்டாளர்களும் இன்று சட்ட நடவடிக்கைகளில் தாமதம் குறித்து பல்வேறு சிக்கல்களை நமக்கு முன்வைக்கின்றனர். இதைப் பற்றி நான் நீண்டநேரம் பேசமாட்டேன். நுவரெலியாவில் நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தில் இது தொடர்பில் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தோம்.

பிரதம நீதியரசருடன் கலந்துரையாடி, அரசாங்கத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பிரதம நீதியரசர் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் உட்பட நீதிபதிகள்  மற்றும் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மேலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.கள் குழு, சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளை ஒன்றிணைந்து இப்பிரச்சினைகளை கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இது நீண்டகாலப் பிரச்சினை. எனவே ஒரு குழு மற்றைய குழுவை குற்றஞ்சாற்றிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மேலும், நமது சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சில சட்டங்கள் நீதிமன்றங்களைப் போலவே பழமையானவை. 175 வருடங்களாக பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக நமது நீதி அமைச்சர் இதில் விசேட அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். முன்பு, 6 மாதங்களுக்கு ஒரு முறையே சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்போது அடிக்கடி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த சட்டங்களை நிறைவேற்ற  மூன்று வாரங்களுக்கு பாராளுமன்றத்தை கூட வேண்டியேற்படும் என்று நான் நினைக்கிறேன்..

இதேவேளை மதத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பான முழு கருத்தியலும் தற்போது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் சல்வான் மோமிகா (Salwan Momika)  என்பவர் சுவீடனில் உள்ள துருக்கி தூதரகம் முன் குர்ஆனை எரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினார். பொலிஸார் அதற்கு அனுமதி மறுத்தாலும் அது, கருத்து தெரிவிக்கும் உரிமை என்று உயர்நீதிமன்றம்  அறிவித்திருந்தது.

மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலே பொலிஸார் செயல்பட்டார்கள். அது  கருத்து தெரிவிக்கும் உரிமை என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது. புனித குர்ஆன் எரிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவீடனுக்கு அனைத்து நாடுகளாலும் அழுத்தம் விடுக்கப்பட்டது.

அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேல் கூட இதை செய்யப்படக்கூடாத ஒன்று என்று கூறியது. இது ஏபிரகாமின் கடவுள் பற்றிய புனித நூல் என்றும், இதை அவமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புனித குர்ஆனை எரிப்பது அருவருக்கத்தக்க மற்றும் அவமரியாதைக்குரிய மற்றும் தூண்டிவிடும் செயல் என்றும் சுவீடன் தெரிவித்துள்ளது. ஆனால்,  கருத்துச் சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்  கூறியது.

இந்த பதிலைத் தொடர்ந்து ஒரு சில மேற்கத்தேய அரசாங்கங்கள் இது கருத்துச் சுதந்திரம் என்று கூறின. அவ்வாறு இதனை கருத்துச் சுதந்திரத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் தற்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றுள்ளது.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதோடு  இன்று 13ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனீவாவில் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. இப்போது எழும் கேள்வி இதுதான். இது மதச் சுதந்திரத்தை மீறுவதாக நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால் இதை கருத்து சுதந்திரத்தின் கீழ் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எல்லாவற்றையும் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் கொண்டு வர முடியாது. அதற்கு ஒரு வரையறை இருக்க வேண்டும்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது மேற்குலக நாடுகளுக்கு பின்னடைவாக அமையும் என சில அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இது மேற்கு அல்லது கிழக்கு அல்லது வடக்கு அல்லது தெற்கு பிரச்சினை அல்ல. இது மதத்தைப் பின்பற்றும் உரிமை பற்றிய கேள்வியாகும்.

நான் முஹம்மது நபியைப் பின்பற்றுபவன் அல்ல. ஆனால் திருக்குர்ஆன் மிகவும் மதிப்புமிக்க நூல் என்று நான் நினைக்கிறேன். பகவத் கீதை மற்றும் பைபிளையும் நாம்  அதேபோன்று   பயன்படுத்தலாம். இதேபோன்று, தம்ம பதத்திலும் அல்லது திரிபிடகத்திலும் பயனுள்ள விடயங்களைக் கண்டறியும் பௌத்தர் அல்லாதவர்களும் இருக்கின்றனர்.

எனவே நாம் அனைவரும் இதை மதத்தின் மீதான தாக்குதலாகக் கருதுகிறோம். ஆனால் ஒரு சில மேற்கத்தேய நாடுகளின் கருத்துப்படி இது ஒரு கருத்துச் சுதந்திரமாகும். ஏனென்றால், அவர்கள் குழப்பத்தை மறைக்க கருத்துத் தெரிவிக்கும் எண்ணக்கருவை  விரிவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.

அதனால் மேற்கத்தேய விழுமியங்களை பரப்புவதற்காக கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

000

Related posts: