கரியாலை நாகபடுவான்குளம் பாசன வாய்க்கால்களை புனரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

Saturday, May 14th, 2016

கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ்வரும் நெல்வயல்களுக்கான நீர்ப்பாசன வாய்க்கால்கள் நீண்டகாலம் புனரமைக்கப்படாமையால் தமது பாசன நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நாகபடுவான் குளம் நிர்மாணிக்கப்பட்டு 1965ஆம் ஆண்டளவில் இக்குளத்துக்கான வாய்க்கால்கள் புதிதாக அமைக்கப்பட்ட போதும் இன்றுவரை இந்த வாய்க்கால்கள் புனரமைக்கப்படாத நிலையிலேயே நீர்ப்பாசன நடவடிக்ககைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இங்குள்ள விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் ஒரு செய்தியாகும்.

இக்குளத்துடன் தொடர்புபட்ட நிலப்பகுதியின் அமைப்பை கவனத்திலெடுக்காது இந்த வாய்க்கால்கள் அமைக்கப்பட்டமையின் காரணமாக இக்குளத்திலிருந்து நீண்டதூரத்திலுள்ள வயல்களுக்கு நீரைப்பாய்ச்சுவது விவசாயிகளைப் பொறுத்தவரை இயலாத ஒன்றாகவே இருந்துவருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இக்குளத்தை நம்பி 500க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் 1200 ஏக்கர் நிலத்தில் தமது நெற்செய்கையை மேற்கொண்டுவரும் ஒரு £ழலில் காலபோக செய்கையின்போது மழை குறைவாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி வயல்கள் நீர் கிடைக்காது எரிந்து போகும் ஆபத்தை விவசாயிகள் எதிர்கொண்டிருப்பதும் கவனத்துக்குரிய ஒரு செய்தியாகும்.

இந்த வாய்க்கால்கள் சீரின்மை காரணமாக ஏற்பட்டிருக்கும் பிரதானமான பாதிப்பு என்பது முழு நெல்வயல்களுக்கும் பாய்ச்சக்கூடியதாக இருக்கும் இக்குளத்தின் நீரை ஒருபகுதி வயல்களுக்கே பாய்ச்ச வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதாகும்.

இந்த இக்கட்டான நிலமையை கவனத்தில் கொண்டு அண்மையில் பாராளுமன்ற  உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது யாழ் அலுவலகத்தில் சந்தித்த இப்பகுதி விவசாய அமைப்புக்களின்; பிரதிநிதிகள் இக்குளத்தின் வாய்க்கால் அமைப்பை நேரடியாக பார்வையிடுமாறு கோரியுள்ளதோடு விரைவில் இவற்றை புனரமைத்துதருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக இங்குள்ள அனைத்து விவசாயிகளதும் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜரொன்றை டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இங்குள்ள கமக்காரர் அமைப்பின் பிரதிநிதியொருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.