கந்தகாடு சம்பவம் – இதுவரை 261 பேர் கைது – தேடுதல் இன்றும் தொடர்கிறது என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, June 30th, 2022

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஏனையவர்கள் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்றவர்களில் இதுவரை 261 பேர் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கியிருந்த அறைகளில் உள்ள கம்பிகளை உடைத்து கொண்டு சுமார் 500 க்கும் அதிகமானவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தப்பிச் சென்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அவர்கள் தப்பிச் சென்றனர். குறித்த மோதல் சம்பவத்தில் பதுளை – தெமோதரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும், தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர், காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுக்கின்றனர்.

தப்பிச் சென்றவர்களை கைது செய்ய முற்பட்ட போது சோமாவதிய – பொலன்னறுவை வீதியின் பெரியாறு பாலத்திற்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டது. தப்பிச் சென்றவர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல்வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்னனர்.

அவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சிலர், மோதலில் பலியானவரின் சடலத்தை பெரியாறு பாலத்திற்கு அருகில் வைத்து கொண்டு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகத்தை  மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் சடலத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். எவ்வாறாயினும், சம்பவத்தின் போது ஏற்பட்ட மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: