கண்டி வன்முறை தொடர்பில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

Sunday, March 11th, 2018

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இதன்படி, ஓய்வுபெற்ற மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், தாக்குதல் நடத்தப்பட்ட மற்றும் சேதங்களுக்கு உள்ளாகிய வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே –

குறித்த வன்முறை சம்பவம் தொடர்பாக நாட்டிலேற்பட்டிரந்த பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதியினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related posts: