கண்டி நில அதிர்வு விவகாரம் – சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிர்வு ஏற்பட்டதாக கூற முடியாது – நிபுணர்களின் ஆய்வறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிப்பு!
Wednesday, November 25th, 2020கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 18 ஆம் திகதி உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர்களின் ஆய்வறிக்கை சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கண்டி, அளுத்வத்தை, அம்பாங்கோட்டை, திகன, மயிலப்பிட்டி, அனுரவத்தை, ஹரவத்தை முதலான பிரதேசங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டிருந்தது. இது குறித்து ஆராய்வதற்காக ஆறு பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவான நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தமது அறிக்கையை விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் இந்த அதிர்வு ஏற்பட்டதாக கூற முடியாது என நிபுணர் குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு தொடர்பில், தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களினதும், நீர்த்தேக்கங்களினதும் பாதுகாப்பு கருதி, செயற்படுத்தப்படவேண்டிய சில பரிந்துரைகளையும் நிபுணர்குழு முன்வைத்துள்ளது.
இதன்படி, விரிவான புவியியல், கட்டமைப்பு வரைபடத்தை உருவாக்க புவியியலாளர்கள் குழு உடனடியாக அதிகாரம் பெற வேண்டும்.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தேசிய தரவு மையத்துடன் தரவு இணைப்புடன், குறிப்பாக விக்டோரியா அணைப்பதியில் நில அதிர்வு சாதனத்தை நிறுவ நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த நிலையில், விக்டோரியா நீர்த்தேக்கம் உட்பட அனைத்து நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பிற்காக திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக, அறிக்கை கையளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வினால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணை பாதிக்கப்படவில்லை என்று நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|