கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகளுக்கும் மூவரின் உயிரைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கும் தொடர்பு இல்லை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020

கண்டி மாவட்டத்தில் அண்மையில் உணரப்பட்ட நில அதிர்வுகளுக்கும் இன்று கட்டடம் இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார்..

கண்டியில் குண்டசாலை, பன்வில மற்றும் வத்தேகம ஆகிய பகுதிகளில் இம்மாதம் 13ஆம் திகதியும் அதற்கு முன்னரும் பல தடவைகள் நில அதிர்வு உணரப்பட்டது.

இதேநேரம், இன்றுகாலை கண்டி பூவெலிகட பகுதியில் வீடொன்றின் மீது 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க, நில அதிர்வுகளுக்கும் இன்று கட்டடம் இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று இடிந்து விழுந்த கட்டடம் அமைந்துள்ள பிரதேசத்திற்கும் சில அதிர்வுகள் உணரப்பட்ட பிரதேசத்திற்கும் பாரியளவு தூர இடைவெளி காணப்படுகிறது.எனவே நில அதிர்விற்கும் கட்டட அனர்தத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

நிலம் தாழிறங்கியதன் காரணமாகவே கட்டடம் இடிந்து விழுந்தது. இதற்கான ஏனைய காரணிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துச மத்திய நிலையம் ஆராயும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: