கணிதப் பாடப் புத்தகத்தில் வரலாற்றுப்பாடம் உடன் விசாரணை மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு – அமைச்சர் அகில விராஜ் காரியவசம் !

அரசாங்கம் வழங்கும் மாணவர்களுக்கான கணிதப்பாடப் புத்தகங்களில் வரலாற்றுப் பாடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்களும் முறைப்பாடுகளும் அண்மையில் பரவலாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அது பற்றி உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர உத்தரவை வழங்கியுள்ளார்.
கடந்த வாரம் கெக்கிராவை கல்வி வலயப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த தரம் 9 வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடப் புத்தகங்களிலேயே இவ்வாறு வரலாற்றுப் பாடங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதுபற்றி கெக்கிராவை கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும் கெக்கிராவை வலயக்கல்வி அதிகாரிகளும் உடனே கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் இந்தத் தகவல்களும் முறைப்பாடுகளும் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்தே கல்வி அமைச்சர் இவ்வாறு கணிதப்பாடப் புத்தகத்தில் வரலாற்றுப் பாடம் எவ்வாறு புகுத்தப்பட்டது என்பது பற்றி உடனே விசாரணைகளை மேற்கொள்ளும்படி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சிக்கு அவசர அறிவித்தலை கடந்த 8 ஆம் திகதி வழங்கியுள்ளார்.
நாட்டின் ஏனைய கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த மேற்படி தரம் 9 கணிதப்பாடப் புத்தகங்களில் அவ்வாறு சரித்திர பாடம் உள்ளடக்கப்படாத நிலையில், கெக்கிராவை வலயப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த புத்தகங்களில் மட்டும் எவ்வாறு வரலாற்றுப் பாடம் புகுத்தப்பட்டது என்பது பற்றி விசேடமாக விசாரணை செய்யும்படியும், அத்துடன் இந்தப் புத்தகங்கள் அரசாங்கத் திணைக்களத்தால் அச்சிடப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடமும் உடன் விசாரணைகளை மேற்கொள்ளும் படியும் அமைச்சர் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்
Related posts:
|
|