கணவரிடமிருந்து விடுதலை வேண்டும்-சுசந்திகா

Sunday, June 19th, 2016

நடைபெற்ற சம்பவம் எனக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மனதில் மறைத்து வைத்திருந்த விடயம் இதன்மூலம் முழு நாட்டிற்கும் தெரியவந்துள்ளது. எனவே எனது கணவரிடம் இருந்து எனக்கு விடுதலை வேண்டும் என ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திகா மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு சொந்தமான வீடு ஒன்றினை வாடகைக்கு வழங்க முற்பட்ட போது எனது கணவர் முரண்பட்டு தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு குடிபோதையில் தேடிவந்த கணவர் சவளால் தாக்குதல் நடத்தியாக குறிப்பிட்ட அவர் தான் வாழ்நாளில் சம்பாதித்தவை அனைத்தையும் தனது கணவர் இல்லாமல் செய்து விட்டதாகவும் தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் தனது கணவரால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும் வெட்கத்தின் காரணமாக தான் இது தொடர்பில் வெளியே சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது தொடர்பில் கவலையடைகின்றேன். இதுவரை காலமும் பல விடயங்களை மனதில் மறைத்து வைத்திருந்தேன். ஆனால் தற்போது முழு நாட்டுக்கும் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இது எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது.நானும் சில தவறுகளை செய்திருக்கின்றேன். அவ்வாறு தவறுகள் செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கவும் தயாராக உள்ளேன்.

இந்த சம்பவம் இலங்கையிலுள்ள ழுமு பெண்களுக்கும் ஒரு பாடமாகும். நல்ல கணவர் மனைவியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. எனினும் எனது கணவரிடம் இருந்து விடுதலை வேண்டும். என்னை பத்து வருடம் சிறையில் அடைத்தாலும் நான் அடைந்த துன்பங்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும்.இதற்கான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் முன்னெடுப்பேன் என்றார்.

Related posts: