கடும் வறட்சி – வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்!

Tuesday, June 25th, 2019

நிலவும் வறட்சியுடனான காலநிலையின் காரணமாக 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வறட்சியினால் வட மாகாணம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்த பிரதேசத்தில் பொது மக்களுக்கான குடி நீர் விநியோகத்திற்கான நடவடிக்கை முன்னெடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதேசத்தில் உள்ள இடர் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்த பணி முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த பணிகளுக்காக போதுமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்த அவர் கடந்த சில தினங்களாக மழை பெய்த போதிலும் இது போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் 21,078 குடும்பங்களைச் சேர்ந்த 70,595 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 22,513 குடும்பங்களைச் சேர்ந்த 74,435 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 13,427 குடும்பங்களைச் சேர்ந்த 45,773 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 5194 குடும்பங்களைச் சேர்ந்த 16,720 பேரும் மன்னார் மாவட்டத்தில் 18,074 குடும்பங்களைச் சேர்ந்த 63,115 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,299 குடும்பங்களைச் சேர்ந்த 18,850 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,766 குடும்பங்களைச் சேர்ந்த 40,093 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 4974 குடும்பங்களைச் சேர்ந்த 19,230 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 11,536 குடுமபங்களைச் சேர்ந்த 69,957 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2459 குடும்பங்களைச் சேர்ந்த 8121 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் 1,23,771 குடும்பங்களைச் சேர்ந்த 4,50,160 பேர் மொத்தமாக வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாகும் என்றும் இடர் முகாமைத்து மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: