கடும் வறட்சி – மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறை குடிதண்ணீர் விநியோகத்தில் கட்டுப்பாடு – அதிர்ச்சியில் மக்கள்!

Sunday, September 3rd, 2023

கடும் வறட்சி காரணமாக நாளை தொடக்கம் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களுக்கு தற்காலிகமாக 3 நாள்களுக்கு ஒரு தடவை மட்டும் குடிதண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் வே. உதயசீலன் அறிவித்துள்ளார்.

தற்போது மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு குடிதண்ணீர் பெறப்படும் நிலையங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வறட்சி காரணமாக மக்களின் பாவனை வீதமும் அதிகரித்துள்ளது. இதனால்  நீர் விநியோகத்திற்கான குடிதண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் மழையால் உருவாக்கப்படும் நிலத்தடி நீர் நிலைகளை நம்பியே நீர் விநியோகத் திட்டங்கள் உள்ளன. நீர் நிலைகள் அற்றுபோகுமானால் குடிதண்ணீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும்.

எனவே குடிதண்ணீரை வீண் விரையம் செய்யாது  மிகவும் சிக்கனமாக குடிதண்ணீருக்கும் சமையல் தேவைக்கும் மட்டும் பயன்படுத்துமாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: