கடும் வறட்சி : தீவகத்தில் மக்களுடன் கால் நடைகள் , பயிர்கள் பெரும் பாதிப்பு!

Monday, August 13th, 2018

குடாநாட்டில் தொடர்ந்துவரும் கடும் வறட்சி காரணமாகத் தீவகப் பிரசேத்தில் நீர்நிலைகள் முழுமையாக வற்றிய நிலையில் அப்பகுதியில் வாழும் கால்நடைகள் நீருக்காக அலைந்து திரிவதுடன் பயன்தரு மரங்கள், பயிர்கள், என அனைத்தும் வாடும் நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

வேலணை ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் காணப்படும் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகின்றது. மக்கள் குடிதண்ணீர்த் தேவைக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் தண்ணீருள்ள கிணறுகளை நாடிச் அலைந்து திரிவதைக் காண முடிகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்டதாக இனங்காணப்பட்ட கிராமங்களுக்குச் குறித்த பிரதேச சபைகளும் பொது அமைப்புகளும் குடி தண்ணீர்த் தாங்கிகள் மூலமாகத் தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்றது. ஆனாலும் அவர்களது ஏனைய தேவைகள் தொடர்பில் தேவையான நிர் தொடர்பில் இதுவரை குறித்த தரப்பினர் அக்கறை செலுத்தவில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குடிதண்ணீர் வழங்குவதற்குப் பயன்படுத்தும் கிணற்றில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழாய் மூலமான குடிதண்ணீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் குறித்த பிரதேசங்களில் தண்ணீருக்குப் பெருந் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதேவேளை கிணறுகள், குளங்கள், போன்றனவற்றில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பயன் தரும் மரங்கள் உள்ளிட்ட அனைத்து மரங்களுக்கும் போதிய அளவு தண்ணீர் இன்மையால் கருகி வரும் நிலை காணப்படுவதுடன் சிலர் வேறு இடங்களிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அத்தகைய பயிர்களுக்குத் தண்ணீர் விடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

Related posts: