கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 13th, 2021

இலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களை மூடுவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்கள் செயற்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பல நாடுகள் தற்காலிகமாக இலங்கைக்கு பயணத் தடையை விதித்துள்ளன என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் “சில நாடுகள் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளதால், இலங்கையர்களும் சில நாடுகளுக்கு பயணிக்க முடியாது. குவைத் மற்றும் டுபாய் போன்ற நாடுகள் இலங்கை மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் இருந்து விமானங்களை நிறுத்தியுள்ளன.

நாங்கள் எப்போதும் சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றுகிறோம். எதிர்காலத்திலும் இதில் எந்த மாற்றமும் இருக்காது. சுகாதாரத்துறை எமக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின்படி மேலும் நடவடிக்கை எடுப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: