கடல், வான் இணைப்புகள் இந்தியாவுடனான இலங்கையின் இணைப்பை வலுவாக்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடான கடல் இணைப்பும், பலாலி விமான நிலையத்தின் ஊடான வான் இணைப்பும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கடல்வழி இணைப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாகப்பட்டணம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நேற்று சனிக்கிழமை (14) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வின்போது காணொளியூடாக வழங்கிய செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது செய்தியில் மேலும் தெரிவித்ததாவது –
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் அதிகரிப்பதில் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை முக்கிய படியாகும்.
இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்கும் பல ஆயிரம் வருடங்களாக பாக்குநீரிணையூடாக மக்கள் பயணித்துக்கொண்டிருந்தனர்.
இதன் ஊடாகவே நமது கலாசார மற்றும் வர்த்தக தொடர்புகள் வளர்ச்சியடைந்தன. எவ்வாறிருப்பினும், வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் தற்போது அமைதி திரும்பியுள்ளது. அதற்கமைய மீண்டும் கடல் இணைப்பை ஏற்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேசியிருக்கின்றேன்.
அதற்கமைய இந்த கடல்வழி இணைப்பை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கிற்கும், இந்திய கப்பற்துறை அமைச்சின் ஒத்துழைப்புக்கும் நன்றி கூற விரும்புகின்றேன். அதே போன்று இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சருக்கும், அவரது அமைச்சினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் நன்றி கூற வேண்டும்.
இனிவரும் நாட்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை காணலாம் என்று நாங்கள் நம்புகிறோம். முதன்முறையாக பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
காங்கேசன்துறை துறைமுகம் கடல் இணைப்பை வழங்குவதைப் போன்று, பலாலி விமான நிலையம் எமக்கு விமான இணைப்பை வழங்குகிறது. இவற்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|