கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்க நடவடிக்கை!

Tuesday, May 4th, 2021

கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்கதுறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன் கப்பல்கள் மூலம் பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளமையால் கடலோரப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்களுக்கான ஒழுங்குபடுத்தல்களின் தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அப்போதிருந்த அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சுடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் அவ்வாறனதொரு ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பை தயாரிக்கும் கருத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்காக லொயிட் றெஜிஸ்ரார் ஏசியா நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த அனைத்துத் தரப்பினரையும் கேட்டறிந்து 04 ஒழுங்கு விதிகள் நகலாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 1971 ஆம் ஆண்டு 52 ஆம் இலக்க வணிக் கப்பல்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விடயத்திற்குப் பொறுப்பான குறித்த ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நகலாக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கான சட்டவரைஞரின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் அதை சமர்ப்பிதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: