கடமை நேரத்தில் மது அருந்தும் அரச ஊழியர்கள் வேலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் – நல்லொழுக்க சம்மேளனம் கோரிக்கை!

Friday, June 29th, 2018

கடமை நேரத்தில் மது மற்றும் புகைப்பாவனையில் ஈடுபட்டால் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக 10 ஆலோசனைகளை முன்வைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினால் மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மது பாவனையை இந்த நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு முன்பு பதவியில் இருந்த ஜனாதிபதிகள் முன்வராத காலகட்டத்தில் தாங்கள் முன்வந்து மது பாவனையை மற்றும் புகைத்தல் பாவனையை இந் நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு தங்களை இந் நாடே போற்றும்.

அந்தவகையில் எமது வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனம் கடந்த 1972 ஆம் ஆண்டு தொடக்கம் மது ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. இந்த செயற்பாட்டை முன்னெடுத்து செல்வதற்கு நிதியுதவிகள் எந்த வகையிலும் எமக்குக் கிடைக்கவில்லை. இருந்தும் நாம் மனம் தளராது செயற்பட்டு வருகிறோம்.

மதுவையும் புகைத்தலையும் குறைப்பதற்கான எமது ஆலோசனைகளாக மதுபானம் விற்கும் நிலையங்களை மாலை 6 மணியுடன் பூட்ட வேண்டும், ஒரு பிரதேச செயலர் பிரிவுகளில் இரண்டிற்கு மேல் மதுபான நிலையம் இருக்கக் கூடாது, 2020 ஆம் ஆண்டிலிருந்து ஒரு மாவட்டத்தில் குறைந்தது இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளில் முற்றாக மது பாவனையை மற்றும் புகைத்தல் பாவனையை தடை செய்ய வேண்டும்.

இந்த செயற்பாடு காலப்போக்கில் அதிகரிக்கப்பட வேண்டும். புகையிலை செய்கையை முன்னறிவித்தல் வழங்கி முற்றாக தடை செய்ய வேண்டும், 2020 ஆம் ஆண்டிலிருந்து எக்காரணம் கொண்டும் தனி மனிதன் குடிவகைகளை கொண்டு செல்லக்கூடாது, கொண்டு செல்வதாயின் லைசன்ஸ் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

பாடசாலை மாணவன் மது மற்றும் புகைப்பொருள் பாவிப்பதை கண்டுபிடித்தால் முதலில் பெற்றோரைப் பொலிஸார் எச்சரிக்கை செய்ய வேண்டும். தொடர்ந்து மாணவன் இந்தச் செயலில் ஈடுபட்டால் மாணவனுக்கும் பெற்றோருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.

மது மற்றும் புகைப்பாவனையால் வரும் நோயாளிகளுக்கு அரச வைத்தியசாலைகளில் 2025 ஆம் ஆண்டுக்குப் பின் வைத்திய செலவுக்காகக் கட்டணம் அறவிட வேண்டும். அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் மது மற்றும் புகைப் பாவனையில் ஈடுபட்டால் வேலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

மது மற்றும் புகைப்பாவனை உள்ளவர்களுக்கு அரச உதவிகள் வழங்கக் கூடாது. குறிப்பாக சமுர்த்தி மற்றும் வீட்டுத்திட்டம், பார் லைசன்ஸ் உரிமையாளரகள்; இறந்தால் மற்றவர்களுக்கு மாற்றக்கூடாது. போன்ற பத்து ஆலோசனைகளை முன்வைத்து வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளது.

Related posts: