கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விசேட அறிவித்தல்!

Wednesday, April 13th, 2022

அமைச்சர்கள் இல்லாவிட்டாலும் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்தல் விடுத்துள்ளார்.

அரச தலைவர் மாளிகையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மற்றும் அரச அமைச்சுக்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இதேவேளை, எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் வகையில் அரச சேவையை எவ்வித இடையூறும் இன்றி பேணுமாறும் அரச தலைவர் தமக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை எதிர்வரும் 18 ஆம் திகதியே வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

அமைச்சரவையை நியமித்து அரசாங்கம் ஸ்திரதன்மையுடன் இருக்கின்றது என்பதை சர்வதேசத்திற்கு காட்டும் நோக்கில் அன்றையதினம் அமைச்சரவையை நியமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் அன்றையதினமே அனைத்து இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புகளை அடுத்து அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்கள் அனைவரும் அண்மையில் இராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து அரச தலைவர் நிதியமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்களை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: