கடந்த 24 மணி நேரத்தில் மட்டு. மாவட்டத்தில் 8 மரணங்கள் – 209 கொரோனா தொற்றாளர்களும் பதிவாதனதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 209 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மரணங்கள் 201 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 300 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 05 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் இம்மாவட்ட மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 2 ஆயிரத்து 400 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 93 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 32 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் 30 வயதுக்கு மேற்பட்ட 92 வீதமானவர்களுக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 23 வீதமானவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி அதிகளவில் நடமாடி வருவதாகவும் இது மாவட்டத்தை இன்னும் பாதக நிலைக்குக் கொண்டு செல்லும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை யிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேருக்கும், வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கும், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டின் பல பகுதிகளில் மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனை களின்போது 364 பேர் தொற்று டன் இனங்காணப் பட்டுள்ளனர். அதே வேளை பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபட்சமாக சாவகச்சேரியில் 124 பேரும் கரவெட்டியில் 102 பேரும் அடங்குகின்றனர்.  இதேவேளை பருத்தித்துறையில் 56 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்

இதேவேளை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்ளிட்ட மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

மேலும், மானிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 227ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: