கடந்த அரசில் நிறைவு செய்யப்படாத திட்டங்களை ஆராய்ந்து அவற்றை பொதுமக்களின் நலன்கருதி நிறைவு செய்யுமாறும் துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்பு!

Saturday, August 29th, 2020

அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக போட்டித்தன்மையின்றி தனியார் துறையின் திட்டங்களுக்கு வழங்கவேண்டிய முக்கியத்துவம் குறித்து இலங்கை பொறியிலாளர் நிறுவனத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த அரசில் நிறைவு செய்யப்படாத திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றை பொதுமக்களுக்காக நிறைவு செய்யுமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, எதிர்வரும் நான்கு மாதங்களில் 28 பில்லியன் ரூபாய் பெறுமதியிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

அத்துடன் கடந்த அரசு, முறையின்றி மேற்கொண்ட நியமனம் குறித்த செயற்பாடுகள் காரணமாக நஷ்டத்தை எதிர்நோக்கும் நிறுவனங்களாக மாறிய அனைத்து நிறுவனங்களும் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர், இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறி நிமல் பெரேரா நம்பிக்கை இதன்போது வெளியிட்டுள்ளார்.

அரச காணிகள் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த வருவாய் 900 மில்லியன் ரூபாயாக காணப்பட்ட போதிலும் கடந்த அரசின் முறைகேடான நியமனங்கள் காரணமாக அதன் மாதாந்த செலவீனம், 166 மில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கடந்த நான்கரை வருட காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 450 என்ற குறைந்த அளவில் காணப்படுவதாக இந்த கூட்டத்தில் வெளியாகியுள்ளது.

எதிர்காலத்தில் பிரதான நகரங்களை இலக்காக கொண்டு கொழும்பு, கண்டி, அநுராதபுரம், மாத்தறை, குருநாகல் போன்ற நகரங்களில் வாகனத் தரிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: