கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 23 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்குப் பிணை!

கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த-2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் கஞ்சாவைத் தம் வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 51 கிலோ 485 கிராம் கஞ்சாப் பொதியும், மற்றைய சந்தேகநபரிடமிருந்து 81 கிலோ 480 கிராம் கஞ்சா பொதியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகநபர்கள் யாழ், நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 23 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் சந்தேகநபர்கள் தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு யாழ். மேல் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
மேற்படி பிணைமனு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை விசாரித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த நபர்கள் கடந்த 23 மாதங்களாகத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு சந்தகநபர்களை தலா -25 ஆயிரம் ருபா சரீரப்பிணையில் செல்ல அனுமதியளித்தார் .
அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம்- 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
Related posts:
|
|