கச்சாய் – பருத்தித்துறை வீதியில் 21 கிலோ மீற்றருக்கு காப்பெற் – முதற்கட்ட பணிகள் ஆரம்பம் கம்பங்கள் பிடுங்கி நடப்படுகின்றன!

தென்மராட்சி கச்சாய் துறைமுகத்திலிருந்து பருத்தித்துறை முனை வரையான 21கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பருத்தித்துறை – கொடிகாமம் கச்சாய் வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் காப்பெற் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.
இந்த வீதி செப்பனிடப்படுவதை அடுத்து கச்சாய் துறைமுக பகுதியிலிருந்து கொடிகாமம் சந்தி வரையான வீதியின் இரு பக்கமும் வீதியை செப்பனிட வீதி அகலிப்பு மேற்கொள்வதற்காக மக்களின் சில காணிகள் சுவீகரிக்கப்படுவதுடன், அகலிப்புக்குத் தடையாக வீதியோரங்களில் உள்ள மரங்களும் தறிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மின் மார்க்க கம்பங்களும் தொலைபேசி பரிவர்த்தனைக் கம்பங்களும், வீதியோரமாக பிடுங்கி நடப்பட்டு சேவைகள் வழங்கப்படவுள்ளன. இந்த வீதி, அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தனியார் வீதி ஒப்பந்த நிறுவனம் செய்வதற்கு முன்வந்துள்ளது. இந்த வீதியில் முதற்கட்டமாக மழை நீர் வழிந்தோடக்கூடியதாக மதகுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டப் பணிகள் நிறைவடைய அடுத்த கட்டப் பணிக்காக கொடிகாமம் நகரிலிருந்து பருத்தித்துறை வீதியை நோக்கி வீதிகள் செப்பனிடும் பணிகள் நகர்த்தப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வீதி அபிவிருத்தியின் பின்னர் துறைமுகப் பகுதியிலிருந்து ஏற்றுமதிக்கான கடல் உணவுகள் மற்றும் தேங்காய் பழ வகைகள், மரக்கறி வகைகள் ஏற்றிச் செல்வது இலகுவாகும் என்றும் இதன் காரணமாகச் சாய்துறை முகப் பகுதியும் வளர்ச்சியடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இவ்வீதியூடாக போக்குவரத்து சபை பேருந்துகளும் நீண்ட சேவையை வழங்கும் வாய்ப்புள்ளது. என்றும் வீதி முழுவதுமாக செப்பனிட ஒரு வருட காலத்திற்கு மேல் தேவை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|