ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021

பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத இலன்ஞ் சீட்டு வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிமுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக நாட்டில் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கமைய மேலும் பல பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொத்தீன் என்பவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் ஆடைகளை பொதியிடுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை மாத்திரம் உபயோகிக்கக் கூடிய சிறு கரண்டிகள், உணவு பொதியிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள், யோகட் உள்ளிட்டவற்றில் காணப்படும் சிறிய கரண்டிகள், குளிர்பானத்துடன் வழங்கப்படும் சிறு குழாய்கள், இடியப்பம் சமைப்பதற்கு உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் மலர்மாலைகள் உள்ளிட்டவற்றை தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையில் நாளொன்றுக்கு 20 இலட்சம் பொலித்தீன் பைகள் உபயோகிக்கப்படுகின்றன. இவற்றில் சிறிய அளவிலானவற்றை முதற்கட்டமாகவும் பெரிய பைகளை அதன் பின்னரும் தடை செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதேவேளை சிறியளவிலான பிளாஸ்டிக் நீர் போத்தல்களை தடை செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்படவுள்ள பொருட்களுக்கான மாற்று தயாரிப்புக்களும் இனங்காணப்பட்டுள்ளது. கடதாசியில் தயாரிக்கப்படும் உணவு பொதியிடும் பெட்டிகள், மரப்பலகையில் தயாரிக்கப்படும் சிறு கரண்டிகள் என்பவை மாற்று தயாரிப்புக்களாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனவே வினைத்திறனான வேலைத்திட்டங்கள் ஊடாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர  அதன் ஒரு கட்டமே இந்த இலஞ்சீற் தடையும் அமைவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: