ஒலிம்பிக் போட்டிக்கு சென்றவர்கள் தொடர்பாக ஆராய சுயாதீன குழு நியமிக்க வேண்டும்!

Wednesday, September 14th, 2016

அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குகொண்டவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சுயாதீனமான குழுவொன்றை நியமிக்க வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேவ் த ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினால் கொழும்பிலுள்ள தேசிய புத்தகசாலை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாதாந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழுவானது விளையாட்டுத் துறைக்கு ஆற்றியுள்ள சேவை தொடர்பாக தாமும் எந்தவொரு நபரும் திருப்திகொள்ளவில்லை என இந்த கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு விடயமும் திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 1996 ஆம் ஆண்டு உலக கிண்ண கோப்பையை வெல்லும் பொருட்டு 10 ஆண்டுகளிற்கு முன்னரே திட்டம் தீட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்வதற்கு தம்மிடம் தற்சமயம் எந்தவித திட்டங்களும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தேசிய ஒலிம்பிக் குழு ஆற்றுகின்ற சேவை தொடர்பாக தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தான் மாத்திரமன்றி எந்தவொரு நபரும் அதிருப்தியையே வெளியிடுவார்கள் எனவும் அரசாங்கம் மாற்றமடைந்த போதிலும், தேசிய ஒலிம்பிக் குழுவில் முன்னைய நபர்களே உள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொண்ட வீரர்கள் தொடர்பில் அறிக்கையொன்றினை தன்னிடம் சமர்பிக்குமாறு கூறியுள்ளார். ஆகவே, இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றினை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மேசை பந்து ஒலிம்பிக் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சரியான செயலை செய்ய முடியாதாயின் விளையாட்டுதுறை அமைச்சர் வீட்டுக்குச் செல்வதே சிறந்தச் செயல் என்றும் உண்மையை வெளிப்படுத்தாது இருப்பதை காட்டிலும் உண்மையை வெளியிட்டு வீட்டுக்குச் செல்வதே கௌரவமான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

arjuna-720x480