ஒற்றைப் பாதைக்கு யார் தலைவர் என்ற போட்டியே சம்பந்தன், கஜேந்திரகுமார் விக்கினேஸ்வரனுக்கிடையில் நடக்கின்றது – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Friday, July 31st, 2020

தமிழ் தேசியத்தை இன்று பேசித் திரிகின்றவர்களே அதனை அவமதிக்கின்றார்கள்.  உன்மையான தமிழ் தேசப் பற்று எதுவும் இல்லாமல் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக “தேசியம்” என்ற புனிதச் சொல்லைத் தமது கட்சிப் பெயர்களில் மட்டும் வைத்துக்கொண்டு வெளிப்படையாகவே மக்களை ஏமாற்றுகின்றார்கள். தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளின் செயற்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக அறிவுபூர்வமாக ஆராய்ந்தீர்களானால் வெறுமனே வாக்கு வேட்டைக்காகவே அதனைச் செய்துவருகின்றார்கள் என்பது புலனாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளரும் பருத்தித்துறை பிரதேசசiபின் முன்னாள் தவிசாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் தெற்கு உடுவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்  –

உண்மையில் தமிழ் தேசியத்தைப் பாதுகாக்கப் போராடுகின்றவர்கள் நாங்கள்தான். ஒரு தேசத்துக்கு அடிப்படையானவர்கள் அந்த தேசத்தின் மக்கள். தமது சொந்த மண்ணை விட்டு மக்கள் புலம்பெயர்ந்து ஓடாமல் தமது தேசத்திலேயே மக்கள் வாழ வேண்டும் என்றால் அவர்களுக்குச் சிறப்பான பொருளாதார வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சொந்த நிலத்தில் மக்கள் வாழ்ந்தால் மட்டுமே – தமது நிலத்தையோ தமது கலாசாரத்தையோ தமது மொழியையோ அவர்கள் பாதுகாக்க முடியும். அப்போது தான் அந்த மக்கள் ஒரு தேசமாகவும் வாழ முடியும். அதற்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். எமது அரசியல் அதுதான். தமிழ் தேசியத்தைப் பாதுகாப்பதற்காக வாக்களிக்க வேண்டும் என்றால்  தமிழ் மக்கள் எமது கட்சிக்கே வாக்களியுங்கள்.

தமிழ் அரசியலில் – ஒரு மாற்றுப் பாதை அல்லது மாற்றுக் கொள்கை என்பது எமது பாதைதான். ஒரு மாற்று அணுகுமுறையோடு பயணிக்கின்றவர்கள் நாங்கள்தான். தமிழ் மக்களிடம் இரண்டு அரசியல் பாதைகள் இருந்தன.

முதலாவது – தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தி அதன் அடிப்படையில் ஓர் ஆட்சி அதிகாரத்தை முதலில் பெற்றெடுப்பது. பின்பு அந்த ஆட்சி அதிகாரத்தினை வைத்துக்கொண்டு தமிழ் தேசியத்தின் நான்கு அடிப்படைத் தூண்களான – எமது நிலத்தையும் பொருளாதாரத்தையும் கலாசாரத்தையும் மொழியையும் பாதுகாப்பது. அத்தோடு அவற்றோடு சேர்ந்து எமது மக்களையும் வரலாற்றையும் பாதுகாப்பது என்பதுதான் அந்த முதலாவது பாதை.

ஆனால் – 40 வருடங்களாக நாங்கள் முயற்சி செய்த அந்த பாதை – இந்திய இலங்கை ஒப்பந்தத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகும் அந்த பாதையில் நாம் பயணிக்க முற்பட்ட போது நடந்தது என்னவெனில் – எமது நிலங்களையும் இழந்து எமது மக்கள் இலட்சக்கணக்கில் எமது தாயகத்தை விட்டு வெளியேறி எமது சுய பொருளாதாரத்தையும் இழந்து – எமது தமிழ் தேசியத்தின் அடிப்படைகளே ஆட்டம் காண தொடங்கிவிட்டன.

அத்தகைய ஒரு வரலாற்று ஓட்டத்தில் – கால மாற்றத்திற்கு ஏற்ப நாங்கள் தேர்ந்து எடுத்ததே எமது மாற்றுப் பாதை. அதுவே தமிழ் மக்களிடம் இருக்கின்ற இரண்டாவது அரசியல் பாதை.

அது என்னவெனில் – எமது தேசியத்தின் அழிவடைந்து கொண்டிருக்கும் அடிப்படைகளான – பொருளாதாரம், நிலம், கலாச்சாரம், மொழி ஆகியவை முதலில் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றைப் பாதுகாத்தாலே – எமது மக்கள் வெளிநாடுகளைத் தேடி ஓடாமல் இங்கேயே வாழும் சூழல் உருவாகும். தேசியத்தின் அந்த நான்கு அடிப்படைத் தூண்களையும் பாதுகாப்பதன் ஊடாகவே தமிழ் தேசியத்தை பாதுகாத்து நிலைநிறுத்த முடியும்.

எனவே – தமிழ் அரசியலின் மாற்றுத் தலைமை என்பது நாங்கள்தான்.

முதலாவது வழிமுறையை இப்போதும் பின்பற்றுகின்றவர்கள் எவ்விதமான நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையும் இல்லாமலும் தூரநோக்கு வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாமலும் வெறுமானே வாக்கு வேட்டைக்கான ஏமாற்று அரசியலாகவே அதனைச் செய்கின்றார்கள்.

அந்த ஒற்றைப் பாதைக்கு யார் தலைவர் என்ற போட்டியே – சம்பந்தனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நடக்கின்றது. அந்தப் போட்டிக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

தமிழ் தேசியம் என்ற தெய்வீக கோட்பாட்டை முன்னிறுத்தி ஒரு ஏமாற்று அரசியலைச் செய்ய நாங்கள் தயாராக இல்லை. சரியாகப் பார்த்தீர்களானால் இருக்கின்ற அத்தனை தமிழ் கட்சிகளுக்கு உள்ளும் உண்மையில் தமிழ் தேசியத்தைப் பாதுகாக்கப் போராடுகின்ற கட்சி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தான் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: