ஒற்றுமையே எதிர்காலத்தை வெற்றி கொள்ளும் வலிமைமிக்க ஆயுதம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

ஒவ்வொரு பிரதேசத்தினதும் அபிவிருத்திகளையும் அப்பிரதேச மக்களது தேவைப்பாடுகளையும் முன்னெடுத்து சென்று அதை வெற்றிகொள்ளும் பங்கு அப்பிரதேசங்களில் காணப்படும் ஒவ்வொரு சனசமூக நிலையங்களுக்கும் உண்டு. அதை இலகுவாக அடைய ஒவ்வொரு கிராமங்களில் வாழுகின்ற மக்களிடையே ஒருங்கிணைப்பு மிக அவசியமாகின்றது. அதை 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்களுக்கு மிகச் சிறந்தமுறையில் இந்த முரசொலி சனசமூக நிலையம் செய்துள்ளதை உணரமுடிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நவாலி முரசொலி சனசமூக நிலையத்தின் பொன்விழா நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சராக இருந்தபோது வடபகுதி மக்களுக்கு பல்வேறு வகையிலும் மக்களது தேவைகள் இனங்காணப்பட்டு பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த சந்தர்ப்பத்தில் இப்பகுதியிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் வாழ்வாதார உதவிகள் தொழில் வாய்ப்புக்கள் எனப் பல தேவைப்பாடுகள் பெற்றுக்கொடுத்திருந்திருக்கின்றோம்.
கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்கு சேவைகளை செய்துவரும் இந்த சனசமூக நிலையத்தினது வளர்ச்சியிலும் நாம் பங்களிப்பு செய்து கொடுத்திருக்கின்றோம். அந்தவகையில் இந்த பகுதி மக்களது மிகப்பெரும் சொத்தாக இந்த சனசமூக நிலையம் மதிக்கப்படவேண்டும்.
இப்பகுதியில் பல கலைஞர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அதுபோல இன்றும் பலர் தமது திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாது காத்திருக்கின்றார்கள்.
ஆனாலும் கடந்த காலங்களில் கலைஞர்கள் தத்தமது வாழ்வியலை மேம்படுத்துவதற்காக பல செயற்றிட்டங்களை நாம் முடியுமான அளவு முன்னெடுத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியிருந்தோம். அதுமட்டுமல்லாது மக்களது வாழ்வாதாரம் தொடர்பாகவும் நாம் பல தேவைப்பாடுகளை செய்து கொடுத்து மக்களது வாழ்க்கையில் மாற்றத்தை எற்படுத்தியிருந்தோம்.
அந்தவகையில் பிரதேசத்தின் தொடர்பாடல் மையமாக இந்த சனசமூக நிலையங்கள் இருப்பதால் அவை திறம்பட இயங்கும்போதுதான் ஒவ்வொருவரது கிராமங்கள் மட்டுமல்ல பிரதேசத்தையும் வளமானதாக உருவாக்க முடியும் என்றார்.
இதன்போது கட்சியின் பிரான்ஸ் பிராந்திய முக்கியஸ்தர் தமிழ்நேசன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|